புதுச்சேரி கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து கொரோனா நோயாளிகள் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை; புதுச்சேரி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து கொரோனா நோயாளிகள் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-05-09 04:05 GMT

ஆலோசனை கூட்டம்

புதுவை மாநிலத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றை தடுக்க மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர்கள் கந்தசாமி, சுதாகர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கட்டுப்பாடு

கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறிய கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் வெளியே வரக்கூடாது. அதேபோல் வெளியில் இருந்தும் யாரும் கட்டுப்பாடு பகுதிகளுக்கு செல்லக்கூடாது. இதனை அந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் கண்காணிப்பாளர்கள். இந்த கட்டுப்பாட்டு பகுதிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்க அருகில் உள்ள 2 கடைகளின் தொலைபேசி எண்கள் அனைத்து வீடுகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன..

இதற்காக வணிக அமைப்பும் இணைந்து ஒத்துழைக்க முன்வந்துள்ளது. எனவே இதன் மூலம் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும். புதுவையில் மொத்தம் 192 கட்டுப்பாட்டு பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்க வருவாய் துறையின் மூலம் 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரும் ரோந்து பணியின் போது இந்த கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிப்பாளர்கள். கட்டுப்பாட்டை மீறி கொரோனா நோயாளிகள் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அபராதம்

புதுவை மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்க தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் புதுவையில் 1,972 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்கள் அனைத்தும் வரைபடங்கள் வரையப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வரைபடங்கள் விவரம் வருவாய் துறையின் இணைய தளத்தில்(https://collectorate.py.gov.in, https://puducherrydt.gov.in) மற்றும் (https://covid19dashboard.py.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதனை கண்டு கொரோனா தொற்று உள்ள இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். புதுவையில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதிகள் குறித்த தகவல்களை https://covid19dashboard.py.gov.in ல் தெரிந்து கொள்ளலாம். சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கப்படுகிறது.

தொடர்பு கொள்ளலாம்

புதுச்சேரி யூனியன் பிரதேச குடியியல் பாதுகாப்பு படையில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு மருத்துவம் தொடர்பான குறைகள் இருந்தால் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இதேபோல் தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால், 1077, 1070 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அதேபோல் அங்குள்ள மக்கள் தங்கள் குறைகளையும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்