முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் பஸ்கள் ஓடவில்லை. மேலும் மதியம் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன.

Update: 2021-05-10 19:08 GMT
கடலூர், 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் 10-ந் தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.இதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8,9-ந்தேதி ஆகிய 2 நாட்கள் அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கடந்த 2 நாட்கள் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். இதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் மது பிரியர்கள் குவிந்து தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக வாங்கிச்சென்றனர்.

பஸ்கள் ஓடவில்லை

இந்நிலையில் நேற்று காலை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு வருகிற 24-ந்தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும். இதையொட்டி நேற்று கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. அரசு பஸ்கள் அனைத்தும் 11 பணிமனைகளிலும் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தனியார் பஸ்களும் ஓடவில்லை. கார், வேன் போன்ற வாகனங்களும் ஓடவில்லை. ஆனால் ஆட்டோக்கள் மதியம் 12 மணி வரை ஓடின. இது தவிர அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள் தங்கு தடையின்றி ஓடின. மளிகை, காய்கறி, பால், இறைச்சி, மீன் கடைகள் திறந்து இருந்தன. வங்கிகளும் திறந்து இருந்தன. இது தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. திறந்திருந்த மளிகை, பல சரக்கு கடை, மீன், இறைச்சி கடைகளில் வழக்கம் போல் மக்கள் பொருட்களை வாங்கிச்சென்றனர்.  மதியம் 12 மணிக்கு பிறகு அந்த கடைகளும் மூடப்பட்டன.

கடைகள் அடைப்பு

ஜவுளிக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடை, சலூன் கடைகள், அழகுநிலையங்கள் உள்பட பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்கவில்லை.
கடலூரில் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள நகைக்கடைகள், தேரடி தெருவில் உள்ள பாத்திர கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் செய்திகள்