வெளி நபர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை வார்டில் வெளிநபர்கள் அனுமதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் ஏ. ஆர். ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

Update: 2021-05-10 21:24 GMT
விருதுநகர், 
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை வார்டில் வெளிநபர்கள் அனுமதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் ஏ. ஆர். ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். 
ஆய்வு 
விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு கொரோனா பாதிப்படைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அவர் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ஆக்சிஜன் கையிருப்பு மற்றும் தடுப்பூசி மருந்து இருப்பு ஆகிய விவரங்களை கேட்டறிந்தார்.
 தொடர்ந்து அவர் கூறியதாவது:- 
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதிப்படைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து உயிர் இழப்பு ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகளும், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தரமான உணவு 
 விருதுநகர்அரசுஆஸ்பத்திரி மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தேன்.
 இங்கு சிகிச்சை அளிக்கப்படுவதற்கு தேவையான ஆக்சிஜன் இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோருக்கு தேவையான ஆக்சிஜன் வசதி செய்து கொடுக்கப்படுவதாகவும் ஆக்சிஜனால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றும் தெரிவித்தனர். மேலும் சிகிச்சை பெறுவோருக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அவசியம் 
தடுப்பூசி போட பதிவு செய்தவர்களுக்கும், மையங்களுக்கு தடுப்பூசி போட வருகிறவர்களுக்கும் முறையாக தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் தற்போதைய நிலையில் தேவையான தடுப்பூசிமருந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள  கொரோனா சிகிச்சை வார்டில் வெளிநபர்கள் தாராளமாக அனுமதிக்கப்படுவதாக புகார் கூறப்பட்டது.  இதனால் நோய் பரவல் ஏற்படும் நிலை உள்ளதால் இதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் வலியுறுத்தினேன். அவர்களும் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். 
நோய் பரவல் 
மாவட்டத்தில் பொது மக்களும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம்  தெரிவிக்கும் விதி முறைகளை கடைபிடித்து நோய்பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டியதும் அவசியமாகும்.
 மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் நோய் பரவலை தடுக்க வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளதால் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்