மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குறித்து கண்காணிப்பு

அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் அளவு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தார்.

Update: 2021-05-12 17:49 GMT
புதுக்கோட்டை, மே.13-
அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் அளவு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தார்.
ஆக்சிஜன் பயன்பாடு
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உடனிருந்தார்.
ஆய்விற்குபின் பணீந்தி ரெட்டி நிருபர்களிடம் கூறியதாது:-
இந்த ஊரடங்கால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இன்னும்  ஒரு வாரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவதன் மூலம் ஆக்சிஜன் பயன்பாடு குறையும். கொரோனா பாதித்தவர்களுக்கான சிகிச்சை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சாதாரண கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், அவர்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் போன்றவை குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பயனாக கொரோனா பாதித்து மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதுடன், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவையும் குறையும். ஆக்சிஜன் தேவைகள் குறித்து தகவல்கள் அறிவதற்காக 104 எண் கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் வினியோகிக்க நடவடிக்கை
மருத்துவமனைகளில் இருந்து ஆக்சிஜன் தேவைகள் குறித்து வரப்பெறும் தொலைபேசி தகவல்கள் கேட்டறியப்பட்டு, அதன்மூலம் ஆக்சிஜன் வினியோகிப்பாளர்களை தொடர்பு கொண்டு தேவையான ஆக்சிஜன் வினியோகிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் அளவு குறித்து முறையாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது உள்ள ஊரடங்கு காலத்தில் மளிகை கடை, காய்கறி கடை, மருந்து கடை உள்ளிட்ட ஒருசில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளில் உள்ள அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகிறார்கள். இனிவரும் காலங்களில் தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அனைவரும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்திட அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீன் மார்க்கெட்டில் ஆய்வு
பின்னர் அவர் புதுக்கோட்டை நகராட்சி மீன் மார்க்கெட், அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி கொரோனா சிகிச்சை மையம் போன்றவற்றையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்