மராட்டியத்தை பற்றி தவறான பிம்பத்தை ஏற்படுத்த வேண்டாம்; தேவேந்திர பட்னாவிசுக்கு அசோக் சவான் வலியுறுத்தல்

மராட்டியத்தை பற்றி தவறான பிம்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என தேவேந்திர பட்னாவிசுக்கு அசோக் சவான் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-05-17 10:59 GMT

பட்னாவிசுக்கு கண்டனம்

பா.ஜனதாவை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் அவர் மாநிலத்தில் நோய் தொற்று பரவலை தடுக்க காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகாவிகாஸ் அகாடி அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி இருந்தார். மேலும் கொரோனா பரவலை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு அறிவுரை வழங்குமாறு சோனியா காந்தியை வலியுறுத்தி இருந்தார். இந்தநிலையில் கொரோனா பரவல் குறித்து தேவேந்திர பட்னாவிஸ் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

தவறான பிம்பம்

பட்னாவிசின் கடிதம் நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு மராட்டியம் தான் பொறுப்பு என கூற முயற்சி செய்து உள்ளது. மராட்டியத்தை பற்றி தவறான பிம்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என அவரை கேட்டு கொள்கிறேன். கொரோனா அலை குறித்து ராகுல் காந்தியின் எச்சரிக்கையை மத்திய அரசு பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மத்திய அரசு அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்பதில் மும்முரமாக இருந்தது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத்தின் ஆட்சியை கவிழ்த்தனர்.

ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவும், பல மாநில சட்டசபை தேர்தல் மீண்டும் நாடு முழுவதும் தொற்று பரவலை அதிகரித்தது. எனவே தொற்று அதிகரிக்க யார் காரணம் என்பதை பட்னாவிஸ் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் தான் உடல்கள் நதிகளில் வீசப்பட்டுள்ளன. எனவே அவர் அதுபோன்ற மாநிலங்களில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு கடிதம் எழுத வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்