கொள்ளிடம் அருகே மதுக்கடையில் துளையிட்டு 67 மதுபாட்டில்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கொள்ளிடம் அருகே மதுக்கடையில் துளையிட்டு 67 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

Update: 2021-05-21 12:53 GMT
கொள்ளிடம்,

கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் அரசு மதுக்கடைகள் கடந்த 10-ந்் தேதியில் இருந்து வருகிற 24-ந் தேதி வரை இயங்காது என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அனைத்து அரசு மதுக்கடைகளும் மூடப்பட்டன.

இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் கிராமத்தில் இயங்கி வந்த அரசு மதுக்கடையின் பின்பக்க சுவரை மர்ம நபர்கள் துளையிட்டு மதுக்கடையில் இருந்து 67 மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர். அதன் மதிப்பு ரூ.11 ஆயிரத்து 390 என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் நேற்று கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

அதில் அரசு மதுக்கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் வெளியில் நின்றவாறு நூதன முறையில் மது பாட்டில்களை திருடி சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து கடையின் சுவற்றில் திருடுவதற்கு உருவாக்கப்பட்ட துளை சிமெண்டு கான்கிரீட் வைத்து டாஸ்மாக் ஊழியர்களால் அடைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்