தஞ்சையில், சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தன

தஞ்சையில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

Update: 2021-05-21 16:18 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, வெற்றிலை. நிலக்கடலை, எள், உளுந்து போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக காவிரி கரையோர பகுதிகளான தஞ்சை, பாபநாசம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி திருப்பூந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வாழை பயிரிடப்பட்டு வருகின்றன.

பலத்த காற்று வீசியது

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டியது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த மழை நீடித்தது. இந்த மழையின்போது பலத்த காறறும் வீசியது.

வாழை மரங்கள் முறிந்தன

இந்த நிலையில் மழை பெய்தபோது காற்றும் பலமாக வீசியதால் தஞ்சை அருகே உள்ள குலமங்கலம் பகுதியில் 5 ஏக்கரில் பயிரிடப்பட்ட 5 ஆயிரம் வாழை மரங்கள் முற்றிலும் முறிந்து விளைநிலத்தில் விழுந்து உள்ளது. இதில் பல வாழைத்தார்கள் விளைந்த நிலையிலும், பல வாழைத்தார்கள் குலை விட்ட நிலையிலும் காணப்பட்டது. இந்த வாழைத்தார்கள் அனைத்தும் இன்னும் ஒரு வாரம் முதல் ஒரு மாதத்திற்குள் அறுவடைக்கு தயாராகி விடும் நிலையில் இருந்தது.

விவசாயிகள் வேதனை

கடந்த 1 ஆண்டாக பாதுகாத்து வளர்த்த வாழைமரங்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர். இதனால் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு காரணமாக விளைவித்த விளைபொருட்களை உரிய முறையில் விற்க முடியாமலும் சரியான லாபம் கிடைக்காமலும் விவசாயிகள் வேதனையில் தவித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழை விற்பனை மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது. ஏராளமான ஏக்கரில் வாழைத்தார்களை அறுவடை செய்ய முடியாமல் வாழைத்தார்கள் பழுத்து அழுகி வீணாகிய நிலை ஏற்பட்டது.

தற்போது தடை உத்தரவால் விற்பனை இல்லாமல் மரங்களிலே காய்ந்து வருகிறது. வருகிற 24-ந ்தேதிக்கு பிறகு விற்பனை செய்யலாம் என்று இருந்த நிலையில் பலத்த மழையால் அனைத்து மரங்களும் முற்றிலும் முறிந்து விட்டது.

நிவாரணம் வழங்க கோரிக்கை

அதாவது ஒரு வருட காலமாக முதலீடு செய்து தற்போது அறுவடை செய்து வருமானம் பார்க்க வேண்டிய நேரத்தில் மரங்கள் அனைத்தும் சேதம் ஆகி விட்டது., இனிமேல் இந்த மரங்களால் ஒரு ரூபாய் கூட எங்களால் வருவாய் ஈட்ட முடியாது. மேலும் விழுந்த மரங்களை அப்புறப்படுத்துவதற்கு கூடுதலாக ரூ.20 ஆயிரம் வரை செலவு ஏற்படும்.

வாழை சாகுபடிக்கு ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். கடன் வாங்கி சாகுபடி செய்து சேதமடைந்து உள்ளதால் தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை எவ்வாறு ஈடுகட்டுவது என தெரியாமல் திகைத்து வருகிறோம். எனவே நெல் போன்ற பயிர்களுக்கு காப்பீடு வழங்குவது போல எங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். வாழை போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு என்று இழப்பீடு வழங்கப்படுவதில்லை. எனவே தற்போது ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வல்லம், நாஞ்சிக்கோட்டை

இதேேபால் தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கன மழை பெய்தது. இதனால் செங்கிப்பட்டி பாலம் அருகே மழைநீர் குளம் போல் தேங்கியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாஞ்சிக்கோட்டை, விளார், மாதாக்கோட்டை, துலுக்கம்பட்டி, கண்டிதம்பட்டு, பொட்டுவாச்சாவடி, புதுபட்டினம், சூரியன்பட்டி, கூத்தன்சாரி, ராவுசாபட்டி, மருங்குளம் உள்பட பல்வேறு கிராமங்களில் 1 மணிநேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் கோடை சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்கதிர்கள் வயலில் சாய்ந்தன.

திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி

திருவையாறு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழையின் போது ஏற்பட்ட காற்றில் திருவையாறு பகுதியில் உள்ள வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் திருக்காட்டுப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. மேலும் திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழையால் நடுப்படுகை காவிரி கரையோரத்தில் பயரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. சிலவாழைமரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. தகவல் அறிந்த வேளாண்மை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

2-வதுநாளாக மழை

தஞ்சையில் 2-வது நாளாக நேற்று மாலை 6 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு வந்தன. சிறிதுநேரத்தில் குளிர்ந்த காற்று வீசியதுடன் வானில் இருந்து மழை துளிகள் வந்து மண்ணை தழுவியது. தூறலாக பெய்த மழை திடீரென பலத்த மழையாக பொழிந்தது. இடி-மின்னலுடன் பெய்த மழையினால் தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இடைவிடாது பெய்த இந்த மழையின் காரணமாக கோடை வெயிலின் வெப்பம் அடியோடு தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. அக்னி நட்சத்திர காலத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்