ஊரடங்கு விதிமுறைகளை மீறி விழுப்புரத்தில், கடை வீதிகளில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்கொரோனா பரவும் அபாயம்

விழுப்புரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-21 16:31 GMT
விழுப்புரம்,

தமிழகத்தில் கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்குட்பட்டு காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள், இறைச்சி, மீன் கடைகள் மட்டும் காலை 6 முதல் 10 மணி வரை மட்டும் இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாளுக்குநாள் நகர்புறம் மற்றும் கிராமப்புற மக்கள் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள மார்க்கெட் மற்றும் நேருஜி சாலைக்கு வருவதால் அப்பகுதிகளில் கூட்டம் அலைமோதுவதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

பஸ் நிலையத்தில் காய்கறி மார்க்கெட்

அவ்வாறு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அரசின் கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் விழுப்புரம் நகரில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுவதோடு, கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டைபோல் காய்கறி மார்க்கெட் மூடிவிட்டு, பழைய பஸ் நிலைய வளாகத்தில் காய்கறி மார்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்