கரூர் அமராவதி ஆற்றில் புதர்மண்டி கிடக்கும் கருவேலமரங்கள்

கரூர் அமராவதி ஆற்றில் புதர்மண்டி கிடக்கும் கருவேலமரங்களை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-05-23 18:22 GMT
கரூர்
அமராவதி ஆறு
கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆகிய 2 ஆறுகள் பாய்ந்து கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவைகள் மற்றும் குடி நீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் அமராவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதில்லை. மேட்டூர் அணை நிரம்பும் போது மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அமராவதி ஆறு எப்போதும் வறண்டு போய் காணப்படுகிறது. இந்நிலையில் கரூர் லைட்ஹவுஸ், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமராவதி ஆற்றின் மையப்பகுதிகளில் கருவேலமரங்கள் அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. 
தண்ணீர் செல்வது தடை
இதனால் கருவேல மரங்களின் வேர்கள் அதிக அளவில் பூமிக்கடியில் ஊடுருவி சென்று நிலத்தடி நீரை  உறிஞ்சி வளரும். மேலும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து கொள்ளும் தன்மை உடையதாக உள்ளது. 
இதனால் ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது அதிகபடியான தண்ணீரை உறிஞ்சி எடுத்து கொள்கிறது. இதனால் கடைமடை வரை தண்ணீர் செல்வது தடைபடுகிறது. 
பொதுமக்கள் கோரிக்கை 
தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறக்கலாம். இதனால் உடனடியாக பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஆற்றில் புதர்மண்டி கிடந்ததை அப்புறப்படுத்தி கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்