தனியார் நிறுவன அதிகாரிகள் 2 பேர் பலி

கிணத்துக்கடவு அருகே லாரி மீது கார் மோதியதில் தனியார் நிறுவன அதிகாரிகள் 2 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2021-05-28 18:59 GMT
கிணத்துக்கடவு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் காளியண்ணன்புதூரை சேர்ந்தவர் ராமராஜ். இவருடைய மகன் சேது விக்னேஷ் (வயது 23). 

இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப் பாடி ரெயில்வே கேட் அருகே இருக்கும் தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். 

இதே நிறுவனத்தில் பொள்ளாச்சி நல்லூத்துக்குளி பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் கிருஷ்ணராஜ் (27) மற்றும் சீனிவாசபுரம் மீன்கரை ரோடு பகுதியை சேர்ந்த சங்கர் நாராயணன் (21) ஆகியோரும் அதிகாரிகளாக வேலை செய்தனர். 

இந்த நிலையில்  இரவில் வேலை முடிந்ததும் 3 பேரும் தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான காரில் வீடு திரும்பி னார்கள். காரை சேது விக்னேஷ் ஓட்ட, அருகில் கிருஷ்ணராஜூம், பின் இருக்கையில் சங்கர் நாராயணனும் அமர்ந்து இருந்தனர். 

அவர்கள் சென்ற கார் கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் கோவில்பாளையத்தை தாண்டி சேரன்நகர் அருகே சென்றது. அப்போது முன்னால் சிமெண்டு பாரம் ஏற்றிச்சென்ற கனரக லாரி கேரளா செல்வதற்காக திடீரென்று வலதுபுறம் திரும்பியது. 

இதன் காரணமாக கண்ணிமைக்கும் நேரத்தில் சேதுவிக்னேஷ் ஓட்டிச் சென்ற கார் அந்த லாரியின் பின்புறத்தில் டமார் என்ற சத்தத்துடன் பயங்கரமாக மோதியது. இதின் காரின் மேல்பகுதி மற்றும் பின்பகுதி அப்பளம்போன்று நொறுங்கியது.

 இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சேதுவிக்னேஷ் உள்பட 3 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 அங்கு அவர்களை பரிசோதித்ததில் சேதுவிக்னேஷ், கிருஷ்ணராஜ் ஆகியோர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த சங்கர் நாராயணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

மேலும் செய்திகள்