2 ஹெலிகாப்டர்களில் சென்னை வந்த 1 டன் மருத்துவ உபகரணங்கள்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Update: 2021-05-28 23:55 GMT
ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழக அரசு வரவழைக்கிறது. இதற்கு இந்திய விமானப்படை விமானங்கள் பெரும் உதவியாக உள்ளன.

இந்தநிலையில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டா்களும் சென்னைக்கு மருத்துவ உபகரணங்களை கொண்டு வர தொடங்கி உள்ளன. அதன்படி சூலூரில் இருந்து இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டா்கள் சென்னை பழைய விமானநிலையம் வந்தன.

அதில் 1,070 கிலோ எடை கொண்ட முக கவசங்கள், கொரோனா வைரஸ் பரிசோதனை கிட்டுகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வந்தன. அவைகளை விமான நிலைய அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். பின்னர் அவைகள் வேன்கள் மூலம் சென்னை ஓமந்தூராா் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதேபோல் ஹாங்காங், சீனா நாடுகளில் இருந்து சென்னை பழைய விமான நிலையத்துக்கு வந்த 2 சரக்கு விமானங்களில் 55 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்தன.

விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் மருத்துவ உபகரணங்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக சுங்க சோதனைகளை முடித்து டெலிவரி கொடுத்து அனுப்பினா்.

மேலும் செய்திகள்