தஞ்சை மாநகராட்சி ஏற்பாட்டின் பேரில் ரூ.150-க்கு 13 பொருட்கள் அடங்கிய காய்கறி பை - குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்கு வழங்கப்பட்டது

தஞ்சை மாநகராட்சி ஏற்பாட்டின் பேரில் ரூ.150-க்கு 13 பொருட்கள் அடங்கிய காய்கறி பை, குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்காக வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2021-05-30 14:20 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. இதனால் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள், மளிகை பொருட்கள் வாகனங்கள் மூலம் வழங்குவதற்கும் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி துறை, தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வதற்காக இதுவரை 222 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தள்ளுவண்டி மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்வதற்காக 275 வண்டி களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்குவதற்காக 85 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 572 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு காய்கறிகள் மற்றும் பழங்கள், மளிகை பொருட்கள் உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்கு காய்கறிகள் சலுகை விலையில் கிடைக்கும் வகையில் 13 பொருட்கள் அடங்கிய காய்கறி பை ரூ.150-க்கு விற்க மாநகராட்சி ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி நேற்று 3 வாகனங்களில் 500 காய்கறி பை எடுத்துச் செல்லப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. இது குடிசை பகுதி மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த பையில் கத்தரிக்காய், தக்காளி, புடலங்காய், முட்டைகோஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு, சவ்சவ், பல்லாரி, கேரட் போன்றவை தலா அரை கிலோ எடையிலும் தேங்காய் 1, பச்சைமிளகாய் 300 கிராம், வாழைக்காய் 2, கருவேப்பிலை- கொத்தமல்லி ஒரு கட்டு என மொத்தம் 13 பொருட்கள் இடம்பெற்றுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த காய்கறி பை பிற பகுதிகளுக்கும் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.ிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்