முதல் தவணை தடுப்பூசி போடப்படவில்லை என அறிவிப்பு: டோக்கன் வழங்கக்கோரி வரிசையில் காத்திருந்த மக்கள்

முதல் தவணை தடுப்பூசி போடப்படவில்லை என அறிவித்த பிறகும் டோக்கன் வழங்கக்கோரி வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

Update: 2021-05-30 14:27 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் தடுப்பூசி போட மக்கள் தயக்கம் காட்டினர். தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா அரங்கத்தில் 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஆனால் மக்கள் அதிகஅளவில் வந்ததால் முதலில் வந்த 150 பேருக்கு மட்டும் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு, அவர்களை மட்டுமே அரங்கத்தில் அனுமதித்தனர். மற்றவர்களை வீட்டிற்கு செல்லும்படி தன்னார்வலர்கள் அறிவுறுத்தினர். ஆனால் யாரும் கலைந்து செல்லாமல் நின்று கொண்ட இருந்தனர். உடனே போலீசார் வந்து டோக்கன் பெறாதவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சை மானம்புச்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனால் காலை முதலே ஏராளமானோர் தடுப்பூசி போட வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தனர். நீண்டநேரமாகியும் அவர்களுக்கு டோக்கன் எதுவும் வழங்கப்படவில்லை. குறைந்த அளவே தடுப்பூசி வந்து இருப்பதால் இன்றைக்கு புதிதாக யாருக்கும் டோக்கன் வழங்கப்படாது எனவும், ஏற்கனவே நேற்றுமுன்தினம் டோக்கன் பெற்றிருந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 2-வது தவணை தடுப்பூசி போடுபவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், மற்றவர்கள் வீட்டிற்கு செல்லலாம் எனவும் தன்னார்வலர்கள் அறிவித்தனர். இருந்தாலும் மக்கள் யாரும் கலைந்து செல்லாமல் நின்று கொண்டே இருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் போய் நின்றதுடன் இன்றைக்கு வந்தவர்களுக்கு டோக்கன் கொடுங்கள். நீங்கள் (டாக்டர்கள்) வரக்கூடிய நாளில் வந்து தடுப்பூசி போட்டு கொள்கிறோம் என தெரிவித்தனர்.

நீண்ட நேரத்திற்கு பிறகு வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. அதில் எந்த தேதியில் வந்து தடுப்பூசி போட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலையில் 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பிற்பகலில் 2-வது தவணை தடுப்பூசி போட வந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது,

தஞ்சை மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளை போட்டு முடித்தபிறகு தான் அடுத்ததாக ஒதுக்கீடு செய்யப்படுவதால் தடுப்பூசியை இருப்பு வைக்காமல் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுகிறது. வரக்கூடிய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் தடுப்பூசியின் இருப்புகளை கவனத்தில் கொண்டு தான் தடுப்பூசி போட வேண்டிய நிலை உள்ளது என்றனர்.

இதுகுறித்து மக்கள் கூறும்போது, ஒரு மையத்தில் இன்றைக்கு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுகிறார்கள் என்றால் திடீரென மறுநாள் 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடுகிறார்கள். இதனால் மக்கள் குழப்பம் அடைகின்றனர். 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு எந்தந்த மையங்களில் தடுப்பூசி போடப்படும் என்பதையும், 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்டவர்களில் யார், யாருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். அதுவும் எந்த மையங்களில் போடப்படும் என்பதையும் தெளிவுபடுத்தினாலே யாரும் அலைக்கழிக்கப்படமாட்டார்கள் என்றனர்.

மேலும் செய்திகள்