வாகனங்களில் சென்று வினியோகம் செய்ய மளிகை வியாபாரிகள் 542 பேருக்கு அனுமதி சீட்டு

திருச்சி மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று மளிகை பொருட்கள் வினியோகம் செய்ய 542 மளிகை வியாபாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2021-05-30 16:47 GMT

திருச்சி, 
திருச்சி மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று மளிகை பொருட்கள் வினியோகம் செய்ய 542 மளிகை வியாபாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த 24-ந்தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக மளிகை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. காய்கறி கடைகள் சில்லறை விற்பனைக்கும் அனுமதி இல்லை. காய்கறி வியாபாரிகள் தள்ளு வண்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வீடு வீடாக சென்று குறிப்பிட்ட நேரத்தில் வினியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை (1-ந் தேதி) முதல் 7-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை கருதி மளிகை வியாபாரிகள் மளிகை பொருட்களை வாகனங்களில் சென்று வினியோகம் செய்வதற்கான சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகை பொருட்கள் வினியோகம் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி சீட்டு பெற்றுக் கொள்வது அவசியம்.

அனுமதிச்சீட்டு

இந்த அறிவிப்பின்படி திருச்சி மாநகராட்சி சார்பில் பொன்மலை, கோ அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் ஆகிய 4 கோட்ட அலுவலகங்களில் நேற்று மளிகை வியாபாரிகளுக்கு அனுமதிச் சீட்டு (டோக்கன்) வழங்கும் பணி நடைபெற்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் மளிகை வியாபாரிகள் 542 பேருக்கு நான்கு சக்கர வாகனங்கள் மூலம் மளிகைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

அனுமதி சீட்டு வழங்கும் பணி இன்றும் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் செய்திகள்