ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களின் 108 வாகனங்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு சமயத்தில் தேவையின்றி சுற்றியவர்களின் 108 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Update: 2021-05-30 17:04 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு சமயத்தில் தேவையின்றி சுற்றியவர்களின் 108 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அரசு அறிவித்துவரும் ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளை மீறியதாக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 720 வழக்குகளும், முக கவசம் அணியாமல் சென்றதாக 25ஆயிரத்து 866 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததாக 986 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
மேலும், அத்தியாவசியமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது 95ஆயிரத்து 784 வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதுடன் 1,388 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்படி உத்தரவுகளை மீறி செயல்பட்ட 16 வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாத 43 கடைகளுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு  உள்ளது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் மட்டும் மாவட்டத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 30 வழக்குகளும், முக கவசம் அணியாமல் சென்றதாக 144 நபர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததாக 18 நபர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அத்தியாவசியமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது 167 வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 106 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை போலீசார் அமல்படுத்தும்போது பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். 
எச்சரிக்கை
மேற்படி கட்டுப்பாடுகளை மீறி கடைகளை திறந்தால் சீல் வைக்கப்பட்டு சட்டப்படியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படு வதுடன் தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்