நண்பர்கள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி சோகத்தில் மூழ்கிய கிராமம்

கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2021-05-30 18:09 GMT
ஆதனக்கோட்டை:
ஆதனக்கோட்டை அருகே உள்ள வடக்குத்தொண்டைமான் ஊரணி கிராமத்தை சேர்ந்தவர்கள் துரைராஜ் (வயது 62), அழகிரிசாமி (45), சுந்தரம் (65). நண்பர்களான 3 பேரும், ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சாராயம் வாங்கி அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மூன்று பேருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போகவே தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும், கபசுர குடிநீர் உள்ளிட்ட கசாயம் வைத்து சாப்பிட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி இரவு துரைராஜ் மூச்சுத்திணறல் ஏற்படவே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அழகிரிசாமி உறவினர்கள், அழகிரிசாமியை தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 26-ந்தேதி சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அழகிரிசாமி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். பின்னர் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடைேய சுந்தரத்திற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நண்பர்கள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள நிலையில் வடக்கு தொண்டைமான் ஊரணி கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து புதுக்கோட்டை சுகாதார மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து இன்று (திங்கட்கிழமை) வடக்கு தொண்டைமான் ஊரணியில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்த உத்தரவிட்டிருப்பதாக சுகாதார துணை இயக்குனர் கலைவாணி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்