கொரோனா நோய்த்தொற்று அறிகுறி உள்ளதா? 91,790 வீடுகளில் கணக்கெடுப்பு அதிகாரி தகவல்

கொரோனா நோய்த்தொற்று அறிகுறி உள்ளதா? என்று இதுவரை மாவட்டத்தில் 91ஆயிரத்து 790 வீடுகளில் இதுவரை கணக்கு எடுத்துள்ளதாக திட்ட இயக்குனர் தெரிவித்தார்.

Update: 2021-05-30 18:29 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் நோயத்தொற்று குறைந்தபாடில்லை. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்து விட்டது. பலி எண்ணிக்கையும் 500-யை கடந்து விட்டது.

இந்நிலையில் நோய்த்தொற்றை குறைக்கும் வகையாக வீடுகள் தோறும் சென்று ஊழியர்கள் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்று உள்ளதா? என்று கண்டறிந்து வருகின்றனர். இந்த பணிகள் 5 நகராட்சிகள், 14 ஒன்றியங்கள், 16 பேரூராட்சிகளில் நடந்து வருகிறது.

இதேபோல் 683 ஊராட்சிகளிலும் நடந்து வருகிறது. இது பற்றி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் கூறியதாவது:-

4 ஆயிரம் பேர்

கடலூர் மாவட்டத்தில் 683 ஊராட்சிகளிலும் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். 4000 தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினரை சுழற்சி முறையில் பணி அமர்த்தி அவர்களை வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்று அறிகுறிகள் உள்ளதா ? இது தவிர சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், இருதய நோயாளிகள் குறித்த விவரங்களை கணக்கெடுத்து சுகாதாரத் துறையினருக்கு தெரிவித்து வருகிறோம்.

 நோய்த்தொற்று அறிகுறி உள்ள நபர்களுக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்துகிறார்கள். நோய் தாக்கம் இருந்தால் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நோய் தடுப்பு நடவடிக்கை

ஒரே இடத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டால் அந்த பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, அந்த பகுதியை தடப்பு கட்டைகள் வைத்து அடைத்து வைத்துள்ளோம்.அந்த பகுதி மக்களுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறோம்.

இதற்காக தன்னார்வலர்களை அமைத்திருக்கிறோம். தற்போது 148 ஊராட்சிகளில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அதில் 28 ஊராட்சிகளில் 3 முதல் 9 நோயாளிகள் வரை உள்ளனர்.

 இதனால் அந்த பகுதியை தீவிர நோய் த்தொற்று பகுதியாக கண்டறிந்து அந்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கடந்த ஒரு வாரத்தில் 91 ஆயிரத்து 790 வீடுகளில் உள்ள 2 லட்சத்து 90 ஆயிரத்து 946 பேர்களை கணக்கெடுத்து உள்ளோம். 

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் 2 வேளை கிருமி நாசினி தெளித்து சுகாதார நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்