ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தொற்றை கண்டறியும் களப்பணிக்கு 250 தன்னார்வலர்கள் நியமனம்

ஈரோடு மாநகர் பகுதியில், கொரோனா தொற்றை கண்டறியும் களப்பணிக்கு 250 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-05-30 21:07 GMT
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில், கொரோனா தொற்றை கண்டறியும் களப்பணிக்கு 250 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா களப்பணி
ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிய உள்ளாட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல், இருமல் உள்ளவர்களை கண்டறிந்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அவர்களை தனிமைப்படுத்தி வருகின்றனர். இதில், ஈரோடு மாநகராட்சியில் வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறியும் களப்பணிக்கு தன்னார்வலர்களை மாநகராட்சி நிர்வாகம் நியமனம் செய்து வருகிறது.
அடையாள அட்டை
அதன்படி, ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் கொரோனா களப்பணிக்கு தன்னார்வலர்களுக்கான பணி நியமனம் செய்யும் நேர்காணல் நேற்று நடந்தது. இதில், கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள் என பலர் விருப்பம் தெரிவித்து நேர்காணலுக்கு வந்தனர்.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 250 தன்னார்வலர்கள், முதல் கட்டமாக கொரோனா களப்பணிக்கு அதிகாரிகள் நியமித்து அவர்களுக்கு உடனடியாக மாநகராட்சியின் தற்காலிக அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்