வீடுகளுக்கே சென்று சாராயம் விற்பனை செய்தது எப்படி? கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

வீடுகளுக்கே சென்று சாராயம் விற்பனை செய்தது எப்படி?

Update: 2021-05-30 22:04 GMT
சேலம்:
வீடுகளுக்கே சென்று சாராயம் விற்பனை செய்தது எப்படி? என்பது குறித்து கைதானவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
சாராயம் விற்பனை
சேலம், தலைவாசல் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையெடுத்து மதுவிலக்கு போலீசார் சேலம் அழகாபுரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவது தெரிந்தது.
இதையடுத்து அந்த பகுதியை சோந்த கீர்த்திவாசன் (வயது 30) என்பவரை கைது செய்தனர். அதே போன்று கோம்பைப்பட்டி, வீராணம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தி அந்த பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த செந்தில்குமார் (23), சரவணன் (26), கணபதி (25) உள்பட 12 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மோட்டார் சைக்கிளில் பதுக்கல்
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மதுப்பிரியர்களுக்கு சாராயத்தை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்தது எப்படி? என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர். 
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
கைதானவர்கள் முதலில் செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் அவர்கள் ஒரு குரூப் தொடங்கி உள்ளனர். பின்னர் சாராயம் தேவைப்படுபவர்களிடம் முன்பதிவு செய்து கொண்டு உள்ளனர். 
இதையடுத்து சாராயம் பாக்கெட் விலை மற்றும் பாட்டில் விலை ஆகியவற்றை குறுஞ்செய்தி மூலம் அனுப்பி உள்ளனர். அந்த விலைக்கு சம்மதம் தெரிவிப்பவர்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்து உள்ளனர். மேலும் சாராய பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்து பல இடங்களில் நேரடியாக விற்பனை செய்து வந்து உள்ளனர். 
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்