தவறான கட்சியில் சரியான மனிதர் நிதின் கட்காரி: மராட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான்

7 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், நிதின் கட்காரியை தவறான கட்சியில் சரியான மனிதர் என விமர்சித்துள்ளார்.

Update: 2021-05-31 09:23 GMT
மத்திய அரசு குற்றச்சாட்டு
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பொறுப்பேற்று 7 ஆண்டுகளை கடந்து உள்ளது. இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மராட்டிய காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாநில அரசு குற்றச்சாட்டு
மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளாக அனைத்து முடிவெடிக்கும் அதிகாரத்தையும் தனது கையில் வைத்திருக்கிறது. ஆனால் இப்போது கொரோனா தொற்று பரவ காரணம் மாநில அரசு தான் என குற்றம் சாட்டுகிறது. அதுமட்டும் இன்றி பெட்ரொல் விலை லிட்டருக்கு ரூ.100-க்கு மேல் உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 12 கோடியே 21 லட்சம் பேர் வேலை இழந்துவிட்டனர்.அருகில் உள்ள அண்டை நாடான வங்க தேசத்தின் தனிநபர் வருமானம் இப்போது இந்தியாவை விட அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் கொள்கைகள் தொடர்ந்து நாட்டை பேரழிவை நோக்கி தள்ளிக்கொண்டு இருக்கிறது. நிவாரணம் வழங்குவது மற்றும் ஜி.எஸ்.டி. இழப்பீடு உள்பட அனைத்து விதத்திலும் மராட்டியத்தின் மீது பாரபட்சமான தன்மையுடன் மத்திய அரசு நடந்துகொள்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நல்ல மனிதர்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் தங்களுக்கு பிடித்த யாராவது இருக்கிறார்களான? என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “மத்திய மந்திரியும் நாக்பூரை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான நிதின் கட்காரியால் நல்ல வார்த்தைகளை பேச முடியும். கருத்தில் வேறுபாடு இருந்தாலும் மற்ற கட்சியினருடன் அவர் இனிமையாக உரையாடக்கூடியவர். அவர் தவறான கட்சியில் இருக்கும் நல்ல மனிதர். அவருக்கு மராட்டியத்தை பற்றிய நேர்மறையான அணுகுமுறை உள்ளது. ஆனால் அவரது அதிகாரங்கள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது” என்றார்.

மேலும் செய்திகள்