கருப்பு பூஞ்சை குறித்து அச்சப்பட தேவையில்லை

கருப்பு பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்து இருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-31 16:44 GMT
புதுச்சேரி, ஜூன்.1-
கருப்பு பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்து இருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ உபகரணங்கள்
புதுச்சேரிக்கு 10 வெண்டிலேட்டர்கள், 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 22 அவசரகால சிறிய வகை வெண்டிலேட்டர்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதை சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, கோரிமேட்டில் உள்ள மருந்தகத்தில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறை செயலாளர் அருணிடம்       கவர்னர் தமிழிசை  சவுந்தரராஜன் வழங்கினார். மாநில சுகாதார திட்ட இயக்குனர் ஸ்ரீராமலு உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு   அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆக்சிஜன் படுக்கைகள்
புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் 250 வெண்டிலேட்டர்களும், 1,200 ஆக்சிஜன் படுக்கைகளும் அதிகப் படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு தேவையான பிராணவாயு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவு இருப்பு உள்ளது. புதுச்சேரிக்கு கூடுதலாக தடுப்பூசிகள் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும்   தயங்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
புகையிலை இல்லாத சூழல்
புகையிலை எதிர்ப்பு தினம் இன்று (நேற்று) கடைப்பிடிக்கப்பட்டது. நுரையீரலை பாதிக்கும் என்பதால் புகையிலை பயன்படுத்துவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். அரசு அலுவலகங்களில் புகையிலை இல்லாத சூழலை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
2 டி.ஜி. மருந்து விற்பனைக்கு வந்ததும் புதுவைக்கு வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஐதராபாத்தில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கும் கோரிக்கை வைத்துள்ளேன். பரிசோதனைக்காக சிறிதளவு மருந்துகள் புதுவை கொண்டுவரப்பட்டன. அது நோயாளிகளுக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது.
அச்சப்பட தேவையில்லை
கொரோனா சிகிச்சைக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்துகள் அரசிடம் போதிய அளவு கையிருப்பில் இருக்கிறது. அவற்றை கள்ளச்சந்தையில் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் இந்த நோய் குறித்து தற்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து நம் கைவசம் இருக்கிறது. தாமதமாக மருத்துவமனைக்கு வருவதால்தான் இறப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள்   இது குறித்து அச்சப்பட தேவையில்லை. விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்