என்.எல்.சி.யில் பணி ஓய்வு பெறும் நாளில் தொழிலாளி தற்கொலை

என்.எல்.சி.யில் பணி ஓய்வு பெறும் நாளில் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-05-31 16:48 GMT
நெய்வேலி, 


கடலூர் மாவட்டம் நெய்வேலி 25-வது வட்டம் மரம்வெட்டி தெரு என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி (வயது 60). இவர் என்.எல்.சி. 1-வது சுரங்கத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 
நேற்று முன்தினத்துடன் இவரது பணிக்காலம் முடிவடைந்து, ஓய்வு பெற இருந்தார். அதன்படி நேற்று முன்தினம் 2-ம் கட்ட பணிக்கு  சுந்தரமூர்த்தி சென்றிருந்தார். 

இரவு 10 மணிக்கு அவர் பணி முடிந்து வெளியே வர வேண்டும். ஆனால் 9.30 மணி அளவில் சுந்தரமூர்த்தி, தான் பணிபுரிந்த பகுதியில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

போலீஸ் விசாரணை

இதை பார்த்த சக தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த தெர்மல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   இதுகுறித்து அவரது மகன் சிவப்பிரகாசம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சோகம்

சுந்தரமூர்த்தியின் பணிக்காலத்தில் நேற்று முன்தினம் பார்த்தது தான் அவரது இறுதி நாள் பணியாகும். ஆனால், அதுவே அவரது வாழ்வில் இறுதி நாளாக மாறிவிட்டது.
இது அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி தொழிலாளர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்