காய்கறி லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே காய்கறி லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சாராயம் விற்ற 4 பேரும் சிக்கினர்.

Update: 2021-05-31 17:20 GMT
அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பெரியசெவலை கூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காய்கறி ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். காய்கறியில் மதுபாட்டில்களும், சாராயமும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 
லாரியில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், துலங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் அய்யனார்(வயது 45), வீரப்பன் மகன் சிவராஜ்(29) ஆகியோர் என்பதும், பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்களையும், சாராயத்தையும் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 120 மதுபாட்டில்கள், 500 லிட்டர் சாராயம் மற்றும் அவற்றை கடத்திவர பயன்படுத்திய லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 

4 பேர் கைது 

இதேபோல் திருவெண்ணெய்ல்லூர் பகுதியில் சாராய விற்பனையை தடுப்பதற்காக இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது தென்மங்கலம், சிறுமதுரை, சித்திலிங்கமடம் ஆகிய பகுதிகளில் சாராயம் விற்றதாக தென்மங்கலம் கிராமத்தை சேர்ந்த கலியப்பன் மகன் மணிகண்டன்(37), விழுப்புரம் ஜி.ஆர்.பி. காலனியை சேர்ந்த நாகராஜ் மகன் தீபன் ராஜ்(30), சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த வடமலை மகன் நாராயணன் (37), சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் ஜனார்த்தனன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 680 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்