விவசாயிகளுக்கு கொடுக்காமல் ரூ.27½ லட்சம் மோசடி

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய ரூ.27½ லட்சத்தை மோசடி செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-31 17:26 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் விற்பனை செய்த விளைபொருட்களுக்கான பணத்தை பட்டுவாடா செய்யாமல் நீண்ட நாட்களாக நிலுவை வைத்துள்ளதை கண்டித்து அங்குள்ள விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையறிந்த விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை உள்ளடக்கிய விழுப்புரம் விற்பனைக்குழுவின் செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வரும் ஜெயக்குமார், அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ரூ.27½ லட்சம் மோசடி

அப்போது கடந்த 27.12.2019 முதல் 21.10.2020 வரை உரிமம் பெற்று நடத்தி வரும் அரகண்டநல்லூர் பஜனைமட கோவில் தெருவை சேர்ந்த வியாபாரியான ராஜ் (வயது 37) என்பவர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த விளைபொருட்களுக்குரிய பணமான ரூ.27 லட்சத்து 45 ஆயிரத்து 803-ஐ சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய விற்பனைக்கூடத்தின் வங்கி கணக்கில் செலுத்தாமல் அந்த பணத்தை ஏமாற்றி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து விற்பனைக்குழுவின் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனிடம் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ராஜ் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வியாபாரி கைது

இந்நிலையில் குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று அரகண்டநல்லூர் பகுதியில் ராஜை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை திருக்கோவிலூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்