கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை நேரடியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு; இரும்புக்கதவை மூடி போராட்டம்

கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை நேரடியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து இரும்புக்கதவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-01 11:35 GMT

கொரோனாவுக்கு பலி

அரியாங்குப்பம் காக்காயந்தோப்பு கிராமத்தில் 65 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதையடுத்து மூதாட்டியின் உடல் பாலித்தீன் கவரால் மூடப்பட்டு இறுதிச்சடங்கு செய்வதற்காக ஆம்புலன்ஸ் மூலம் காக்காயந்தோப்பு சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்கான பணிகளை கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மேற்கொண்டனர்.

வாக்குவாதம்

இதுகுறித்து தகவல் அறிந்து உறவினர்கள் அங்கு வந்து மூதாட்டியின் உடலை சுடுகாட்டுக்கு நேரடியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த இரும்புக் கதவையும் இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மூதாட்டியின் உடலை வீட்டிற்கு கொண்டு சென்று உறவினர்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தரராஜன் மற்றும் அரியாங்குப்பம் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொற்று பாதித்து பலியாவோரின் உடலை நேரடியாக சுடுகாட்டிற்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்து கலெக்டரின் உத்தரவை காட்டினர்.

இதை மூதாட்டியின் உறவினர்கள் ஏற்றுக் கொண்டதையடுத்து அவரது உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதுபோன்ற சூழலில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்