பர்கூரில் போலீசார் வாகன சோதனை: பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட 1,584 மதுபாட்டில்கள் பறிமுதல்

பர்கூரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1,584 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-06 17:32 GMT
பர்கூர்:
மதுபாட்டில்கள்
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து சிலர் மதுபாட்டில்களை கடத்தி வந்து, தமிழகத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதனை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீசார் திருப்பத்தூர் கூட்ரோட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை மறித்தனர்.
பறிமுதல்
போலீசாரை பார்த்ததும் டிரைவர் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் 33 அட்டை பெட்டிகளில் 1,584 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், பெங்களூருவில் இருந்து திருப்பத்தூருக்கு மதுபாட்டில்களை கடத்தி செல்ல முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 1,584 மதுபாட்டில்கள், காரை போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், மதுபாட்டில்களை கடத்தி வந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்