முழு ஊரடங்கையொட்டி மாமல்லபுரத்தில் ஆளில்லா விமானம் மூலம் போலீஸ் கண்காணிப்பு

முழு ஊரடங்கையொட்டி மாமல்லபுரத்தில் ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-07 12:46 GMT
ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் உள்ளிட்டவை நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.இந்தநிலையில் மாமல்லபுரத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி மாமல்லபுரம் போலீசார் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் மாமல்லபுரம் ஐந்துரதம் சாலை, மாமல்லபுரம் கடற்கரை சாலை, பொதுப்பணித்துறை சாலை, கோவளம் சாலை, அர்ச்சுனன் தபசு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் 
ஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகன போக்குவரத்து அதிகம் உள்ளதா? பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதா? என மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் 400 அடி உயரத்தில் பறக்கவிடப்பட்ட நவீன தொழில்நுட்ப வசதியுடன் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்து படம் பிடித்தனர்.

இரு சக்கர வாகனம் பறிமுதல்
மேலும் நேற்று காலை 10 மணி அளவில் ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றியதாக 25 இரு சக்கர வாகனங்களை மாமல்லபுரம் பூஞ்சேரி இ.சி.ஆர். சாலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் பறிமுதல் செய்தனர். அத்தியாவசிய பணிகளுக்கு சென்ற இ.பதிவு உள்ள கார்கள், வேன்கள், சரக்கு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்