91 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்

திருப்பூர் மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுடைய 91 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-06-09 16:48 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுடைய 91 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4 நாட்களாக தடுப்பூசி இல்லை
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி பற்றாக்குறையை எடுத்துக்கூறி, அதிகளவு வரவழைத்தனர். தொடர்ந்து தடுப்பூசியும் போடப்பட்டு  வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது இடங்களில் முகாம் என பல்வேறு பிரிவுகளாக தினமும் தடுப்பூசி போடப்பட்டு  வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக கடந்த 4 நாட்கள் திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம்
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து நேற்று வரை மொத்தமாக 2 லட்சத்து 73 ஆயிரத்து 346 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதிலும் முதல் டோஸ் 2 லட்சத்து 29 ஆயிரத்து 11 பேருக்கும், 2-வது டோஸ் 44 ஆயிரத்து 335 பேருக்கும் போடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டவர்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 585 ஆண்களும், 97 ஆயிரத்து 392 பெண்களும் அடங்குவர்.
இதுபோல் 2 லட்சத்து 30 ஆயிரத்து 750 பேர் கோவிஷீல்டும், 42 ஆயிரத்து 596 பேர் கோவேக்சினும் செலுத்தியுள்ளனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 55 ஆயிரத்து 28 பேரும், 18 வயது முதல் 44 வயதுடையவர்கள் 90 ஆயிரத்து 980 பேரும், 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 82 ஆயிரத்து 950 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்