திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.

Update: 2021-06-09 17:55 GMT
திண்டுக்கல் :
திண்டுக்கல் காந்தி மார்க்கெட் கடந்த ஆண்டு ஊரடங்கின் போது மூடப்பட்டது. அதையடுத்து அங்கு புதிதாக கடைகள் கட்டப்பட்டன. எனினும், இதுவரை அந்த கடைகள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் காய்கறி மொத்த வியாபாரிகள் முருகபவனம் பகுதியில் தற்காலிக சந்தை அமைத்தனர். ஆனால், சில்லரை வியாபாரிகள் காந்தி மார்க்கெட்டுக்கு வெளியே சாலையோரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர். இதற்கிடையே கடந்த மாதம் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் சில்லரைகடைகளுக்கு தடை விதிக்கப்பட்டு, வாகனங்களில் காய்கறிகள் தெருத்தெருவாக விற்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மீண்டும் சாலையோரத்தில் கடைகள் அமைத்து காய்கறி விற்பனை செய்யப்பட்டது. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் வியாபாரிகள் கடைகள் அமைக்க இடம்கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அதில் காந்தி மார்க்கெட் பகுதியில் சாலையோரத்தில் வியாபாரம் செய்த 120 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கடைகள் அமைத்து காய்கறிகளை வியாபாரம் செய்தனர். இதில் திண்டுக்கல் நகரை சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.

----

மேலும் செய்திகள்