கொரோனா ஊரடங்கால் பட்டறைகள் மூடப்பட்டன: சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் வெள்ளி தொழிலாளர்கள் பாதிப்பு நிவாரணத்தொகை வழங்க அரசுக்கு கோரிக்கை

கொரோனா ஊரடங்கு காரணமாக வெள்ளி பட்டறைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் சேலம் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் வெள்ளி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-06-09 20:45 GMT
சேலம்:
கொரோனா ஊரடங்கு காரணமாக வெள்ளி பட்டறைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் சேலம் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் வெள்ளி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளி தொழில்
சேலம் மாவட்டத்தில் சிவதாபுரம், பனங்காடு, செவ்வாய்பேட்டை, கோட்டை, வேடுகாத்தாம்பட்டி, சேலத்தாம்பட்டி, திருவாக்கவுண்டனூர், தாதகாப்பட்டி, ரெட்டியூர், பள்ளப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் உள்ளன. இந்த பட்டறைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெள்ளி தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சேலம் வெள்ளி கொலுசு என்றாலே மிகவும் நேர்த்தியாகவும், தரமானதாகவும் இருப்பதால் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. எனவே சேலத்தில் தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு
ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வெள்ளி தொழில் அடியோடு முடங்கி போய் உள்ளது. இதனால் சுமார் ஒரு லட்சம் வெள்ளி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வேலை இழந்து பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே வெள்ளி கொலுசு தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு என்று தனி நலவாரியம் அமைத்து இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்கத்தின் செயலாளர் ஸ்ரீ ஆனந்தராஜன் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கால் வெள்ளி கொலுசு உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளி பட்டறைகள் எதுவும் திறக்கப்படாததால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கொரோனா பாதிப்பிற்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட வெள்ளி உற்பத்தியாளர்கள் இறந்துள்ளனர். அவர்களது குடும்பத்திற்கு அரசு இழப்பீடு தொகை அறிவிக்க வேண்டும்.
தனி நலவாரியம்
வெள்ளி தொழிலாளர்களின் நலன் கருதி தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு அளிக்கப்பட்டது. அதன்படி அவர்களும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளனர். எனவே ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வெள்ளி தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் வெள்ளி தொழிலாளர்களின் நலன் கருதி விரைவில் தனி நல வாரியம் அமைக்க வேண்டும். விரைவில் தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வருகிறது. எனவே வெள்ளி பட்டறைகளை திறந்து தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்