குப்பை கழிவுகளை பொதுமக்கள் சாக்கடையில் கொட்டக்கூடாது சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் வேண்டுகோள்

குப்பை கழிவுகளை பொதுமக்கள் சாக்கடையில் கொட்டக்கூடாது என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-06-09 21:10 GMT
சேலம்:
குப்பை கழிவுகளை பொதுமக்கள் சாக்கடையில் கொட்டக்கூடாது என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை
சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஒருங்கிணைந்த தூய்மைப்படுத்தும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அம்மாபேட்டை மண்டலம் பொன்னம்மாபேட்டை தில்லை நகர் பகுதியில் நடைபெற்று வரும் தூய்மைப்படுத்தும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதன்படி மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் சாக்கடை மற்றும் ஓடைகளில் உள்ள அடைப்புகளை அகற்றி தூர்வாரி மேம்படுத்துதல் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
தூய்மை பணியாளர்கள்
சாக்கடை மற்றும் ஓடைகளில் இருந்து எடுக்கப்படும் கழிவுகள் மீண்டும் சாக்கடைக்குள் செல்லாதவாறு உடனடியாக அகற்ற வேண்டும். அதேபோன்று தெருக்களில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் தினமும் தலா 15 தெருக்கள் வீதம் இந்த பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு மண்டலத்திலும் 100 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனவே வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பை கழிவுகளை சாக்கடை மற்றும் ஓடைகளில் பொதுமக்கள் கொட்டக்கூடாது.
தவிர்க்க வேண்டும்
அதேபோன்று ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நோயில்லாமல் வாழ சுற்றுப்புறத்தை தூய்மையாக பொதுமக்கள் பராமரிக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கழிவுநீர் சாக்கடைகளில் சேதமடைந்த பகுதிகளை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம், ஆய்வாளர் சித்தேஸ்வரன் உள்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்