வீடு, வீடாக காய்ச்சல், ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனை நகராட்சி ஆணையர் தலைமையில் நடந்தது

கூத்தாநல்லூர் பகுதிகளில் வீடு, வீடாக காய்ச்சல், ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனை நகராட்சி ஆணையர் லதா தலைமையில் நடைபெற்றது.

Update: 2021-06-10 17:49 GMT
கூத்தாநல்லூர்,

கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களை பாதுகாப்பாக வீடுகளில் இருக்கும் படி அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் நகராட்சி ஆணையர் லதா தலைமையிலான நகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறது.

காய்ச்சல், ஆக்சிஜன் அளவுகண்டறியும் பரிசோதனை

இந்தநிலையில் கூத்தாநல்லூர் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல், ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனை நகராட்சி ஆணையர் லதா தலைமையில் நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர் அருண்குமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் வாசுதேவன், அண்ணாமலை மற்றும் பணியாளர்கள் வீடு,வீடாக சென்று அங்குள்ளவர்களுக்கு காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது பரிசோதனையில் காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று நகராட்சி ஆணையர் லதா கூறினார்.

மேலும் செய்திகள்