பாலத்தின் தடுப்பு கட்டையில் கார் மோதல்; இன்ஸ்பெக்டர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே பாலத்தின் தடுப்பு கட்டையில் கார் மோதிய விபத்தில் இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-06-10 18:38 GMT
உளுந்தூர்பேட்டை, 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள சிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 56). இவர் சென்னை ஆவடியில் உள்ள 2-ம் சிறப்பு காவல்படை அணியில் பண்டக பிரிவு  இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 
இவரின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து தாயாரின் கரும காரியத்துக்காக ராமகிருஷ்ணன் சொந்த ஊருக்கு சென்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் பணிக்கு செல்வதற்காக நேற்று சென்னைக்கு காரில் புறப்பட்டார். அந்த காரை அவரே ஓட்டி வந்தார்.

கட்டுபாட்டை இழந்த கார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எறஞ்சி கிராமம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ராமகிருஷ்ணன் தனது காரை திருப்ப முயன்றார். 
அப்போது அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த பாலத்தின் தடுப்புக்கட்டை மீது மோதியது. மோதிய வேகத்தில் கார், அந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி கவிழ்ந்தது.

போலீசார் விசாரணை

இந்த விபத்தில் ராமகிருஷ்ணன் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு  சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமகிருஷ்ணனை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதுகுறித்து எடைக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்