சிப்காட் தொழில் பூங்கா பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை

விருதுநகர்-சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பூங்கா இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2021-06-10 20:53 GMT
விருதுநகர், 
விருதுநகர்-சாத்தூர் இடையே சிப்காட் தொழிற்பூங்கா இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
புறவழிச்சாலை 
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கண்ணன் தலைமையில் ஆய்வு பணி மேற்கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- 
மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் முன்னிலையில் அதிகாரிகளுடன் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. அருப்புக்கோட்டை புறவழிச்சாலை பணியை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விருதுநகர்-சாத்தூர் இடையே 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிலம் கண்டறியப்பட்டு உள்ளது.
 இத்தொழில் பூங்கா இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நடை மேம்பாலம் 
எனவே இந்த பணிகளை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பும் சாத்தூர் படந்தால் விலக்கும் அருகிலும் வாகன விபத்துகளை தவிர்க்கும் வகையில் நடை மேம்பாலங்கள் அமைக்க ஏற்கனவே தலா ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
 இந்த பணி பல்வேறு காரணங்களால் முடங்கிவிட்டது. இந்த பணிகளை விரைவுப்படுத்தி இந்த இடங்களில் நடை மேம்பாலங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தத்தில் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் விரைந்து பயன்பாட்டிற்கு வர தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும்.
 இவ்வாறு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
 நிவாரண உதவி
முன்னதாக மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் தமிழ்நாடு 3-ம் பாலின நலவாரியம் சார்பில் ரேஷன் அட்டை பெறாத அடையாள அட்டை பெற்ற 285 மூன்றாம் பாலினத்தவருக்கு முதல் தவணை நிவாரண உதவியாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர். விடுபட்ட அடையாள அட்டை பெற்ற அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.  
3 தற்காலிக டாக்டர்கள், ஒரு செவிலியர், 27 ஆய்வக நுட்பனர் உள்பட மொத்தம் 31 பேருக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளையும் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர். இதில்  தனுஷ் குமார் எம்.பி.,  எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கபாண்டியன், சிவகாசி அசோகன், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன்,  திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்