சேலத்தில் முககவசம் அணியாமல் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை

சேலத்தில் முககவசம் அணியாமல் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2021-06-10 21:29 GMT
சேலம்:
சேலத்தில் முககவசம் அணியாமல் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
முககவசம்
சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வீடுகளில் இருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணியவில்லை என்றால் ரூ.200-ம், சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றால் ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படுகிறது.
சேலம் மாநகராட்சி சார்பில் நடமாடும் வாகனங்களில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. அதாவது ஆட்டோவில் மாநகராட்சி ஊழியர்கள் இருந்து கொண்டு வீதி, வீதியாக சென்று வருகின்றனர். அப்போது சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.
கட்டாய பரிசோதனை
இந்நிலையில், மணக்காடு காமராஜர் மேல்நிலைப்பள்ளி முன்பு நேற்று கொரோனா பரிசோதனை செய்யும் மாநகராட்சி ஊழியர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் முக கவசம் அணியாமல் வந்தவர்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து கட்டாயம் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கொரோனா தடுப்பு முழு கவச உடையுடன் நின்ற மாநகராட்சி ஊழியரை பார்த்தவுடன் வண்டியில் வேகமாக சென்றனர். அப்போது வீடுகளிலிருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என பொதுமக்களுக்கு பரிசோதனை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் அறிவுறுத்தினர். 
அஸ்தம்பட்டி மட்டுமின்றி பெரமனூர், அழகாபுரம், செவ்வாய்பேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நடமாடும் வாகனங்கள் மூலம் முக கவசம் அணியாமல் சென்ற மக்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்