கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார்.

Update: 2021-06-10 22:01 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
ஊரக வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளர் கோபால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையாளர் பழனிசாமி, நகர் ஊரமைப்பு இயக்குனர் கணேசன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொற்று பாதிப்பு குறைகிறது
கூட்டத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 265 கிராம ஊராட்சிகளில் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. ஊரகப் பகுதிகளில் மக்கள் தொகை 17 லட்சத்து 55 ஆயிரம் ஆகும். கடந்த மாதம் 27-ந் தேதி 629 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது தொற்று பாதிப்பு 298 ஆக குறைந்துள்ளது.
இதுவரை 13 ஆயிரத்து 412 பேர் கிராமப்புற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 10,740 பேர் குணமடைந்துள்ளனர். 2,633 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,575 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
களப்பணியாளர்கள்
48 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து ஊராட்சி பணியாளர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு உதவி மையமும், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா ஒரு உதவி மையமும் செயல்பட்டு வருகிறது.
வீடு, வீடாக நோய்த்தொற்று உள்ளவர்களை கணக்கீடு செய்ய 265 குழுக்கள் அமைக்கப்பட்டு 3,219 பேர் களப்பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். ஊரகப் பகுதிகளில் 51 ஆயிரத்து 296 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நோய் தடுப்பு பணிகளில் 6,665 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நோய்தொற்று கட்டுப்பாடுகளை மீறியதாக 5,667 பேருக்கும், தனிநபர் விதிமீறிய 5,419 பேருக்கும் மற்றும் 304 வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.34 லட்சத்து 81 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் 2,455 குக்கிராமங்கள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் பாதிப்பு குறைந்து, இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. உள்ளாட்சித்துறை மற்றும் மருத்துவம், பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து நோய் தொற்று இல்லாத மாவட்டம் என்ற இலக்குடன் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 331 கொரோனா நல மையங்களில் 2,474 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனா நோய் தடுப்பதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உதவித்தொகை
இதைத்தொடர்ந்து மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வாழ்வாதார இயக்கம் திருப்பூர் மாவட்ட மேலாண்மை அலகு மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான சுய உதவி குழு கடனுக்கான காசோலையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் தலா ரூ.2,000 வீதம் 111 மூன்றாம் பாலினத்தவருக்கு நிவாரண உதவி தொகைக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
முன்னதாக திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கம் பாளையம் ஊராட்சி மீனாட்சி நகர் பகுதியில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு பகுதி மற்றும் காய்ச்சல் முகாமை அமைச்சர்கள் பார்வையிட்டனர். கொரோனா பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்தனர். பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
இந்த ஆய்வின் போது திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கோமகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு. நாகராஜன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்