புதுப்பொலிவுடன் காணப்படும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம்

ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

Update: 2021-06-11 04:03 GMT
ஊத்துக்கோட்டை, 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 1989-ம் ஆண்டு தாலுகா அலுவலகம் தொடங்கப்பட்டது. அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன் இந்த அலுவலகத்தை தொடங்கி வைத்தார். 5.52 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த அலுவலகம் 2 மாடிகள் கொண்டது. பொதுவாக அரசு அலுவலகங்கள் பராமரிப்பு இன்றி சுவர்கள் கறை படிந்து எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள் நிறைந்து காட்சியளிக்கும். ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. முட்செடிகள், புதர்கள் மண்டிக்கிடந்தன. அலுவலகத்தில் ஊழியர்கள் அமரும் நாற்காலிகள், மேஜைகள் உடைந்து காணப்பட்டன. தஸ்தாவேஜுகள் பத்திரப்படுத்தும் பீரோக்கள் உடைந்து காணப்பட்டன. பழுதடைந்த கட்டிடம் போல் காட்சியளித்தது.

கடந்த 2020-ம் ஆண்டு 8 தாசில்தார்கள் பணியிட மாறுதல் பெற்று சென்று விட்டனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாசில்தாராக குமார் என்பவர் பதவியேற்று கொண்டார். அவர் பதவியேற்றபோது அலுவலகம் இருந்த அவல நிலையை கண்டு வேதனை அடைந்தார். பின்னர் அவர் எடுத்துக்கொண்ட சீரிய முயற்சியால் தற்போது அலுவலகம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது, ஊழியர்கள் அமர தனித்தனி கேபின்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கேபினுக்கும் கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டது. கோப்புகளை பதப்படுத்த புதிய பீரோக்கள் அமைக்கப்பட்டன. அலுவலக கட்டிடத்தில் வர்ணம் பூசப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் சிரமமில்லாமல் அலுவலகத்துக்கு வந்து செல்ல சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலக வளாகத்தில் அடர்ந்து வளர்ந்து காணப்பட்ட முட்புதர்கள் அற்றப்பட்டன. தற்போது அலுவலக வளாகம் பூங்கா போல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் அமர வசதியாக ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பெரும் முயற்சி எடுத்து கொண்ட தாசில்தார் குமாருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மற்ற தாசில்தார்களுக்கு முன்னோடியாக குமார் திகழ்ந்து வருவது பாராட்டத்தக்க அம்சம் ஆகும்.

முழு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்தவர்கள் மதிய நேரத்தில் 100 பேர் உணவு சாப்பிட தாசில்தார் குமார் ஊத்துக்கோட்டை நான்கு ரோடு சந்திப்பில் உள்ள அண்ணா சிலை எதிரே சிறப்பு பந்தல் அமைத்து உள்ளார். இதில் தினந்தோறும் மதிய நேரத்தில் 100 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

முழு ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறும் வரை இது தொடரும் என்று தாசில்தார் குமார் அறிவித்துள்ளது பாராட்டத்தக்க அம்சமாகும்.

மேலும் செய்திகள்