காயாமொழி பொதுமக்கள் போராட்டம் கைவிடப்பட்டது

காயாமொழி பஞ்சாயத்து செயலரை இடமாற்றம் செய்வது தொடர்பாக நடக்க இருந்த தொடர் போராட்டங்கள் கைவிடப்படுவதாக நேற்று நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2021-06-11 16:08 GMT
திருச்செந்தூர்:
காயாமொழி பஞ்சாயத்து செயலரை இடமாற்றம் செய்வது தொடர்பாக நடக்க இருந்த தொடர் போராட்டங்கள் கைவிடப்படுவதாக நேற்று நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தொடர் போராட்டம்
காயாமொழி பஞ்சாயத்து செயலராக இருந்த இசக்கியம்மாள் பல்வேறு முறைகேடுகள் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீண்டும் அதே பணியிடத்தில் பணியமர்ந்தப்பட்டுள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்து அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம், சங்கு ஊதும் போராட்டம், ஒப்பாரி போராட்டம் என தொடர் போராட்டங்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் முதற்கட்டமாக பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்க இருந்தது.
சமாதான கூட்டம்
இது தொடர்பாக அதிகாரிகள் சமாதான கூட்டம் நேற்று திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் முருகேசன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் பாலசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், யூனியன் கிராம வளர்ச்சி அலுவலர் (பஞ்சாயத்து) அலமேலு, காயாமொழி பஞ்சாயத்து தலைவர் ராஜேசுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் காயாமொழி பஞ்சாயத்து செயலர் இசக்கியம்மாள் மீது ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளது. தூத்துக்குடி உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்திலும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை இறுதி உத்தரவின் அடிப்படையில் மேல் நடவடிக்கை தொடரப்படும்.
மேலும் பஞ்சாயத்து செயலாளர் மீது தொடர்ந்து பல்வேறு புகார் உள்ளதால் பஞ்சாயத்தில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாலும், அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என சமாதான கூட்டத்தில் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது. பணியிட மாற்றம் செய்வது குறித்து திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (பஞ்சாயத்து) மூலம் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்படும் என தீர்மானிக்கப்பட்டது. 
போராட்டத்தை கைவிட முடிவு
இதனையடுத்து காயாமொழி பஞ்சாயத்தில் நடக்க இருந்த தொடர் போராட்டங்களை கைவிட முடிவு செய்யப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்