நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-06-11 20:01 GMT
நெல்லை:
நெல்லையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வண்ணார்பேட்டை பெட்ரோல் பங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 

கவச உடை அணிந்தனர்

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பு கவச உடை அணிந்து, நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனங்களை இயக்க முடியாததை சுட்டிக்காட்டும் வகையில் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து நிறுத்தப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நெல்லை மாநகரில் 7 இடங்களிலும், சங்கர் நகர், நாரணம்மாள்புரம் பேரூராட்சி பகுதிகளிலும், மானூரில் 2 இடங்களிலும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதவிர மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்