செம்பனார்கோவில் வட்டார பகுதியில் சூறைக்காற்றில் 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

செம்பனார்கோவில் வட்டார பகுதியில் சூறைக்காற்றில் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் இழப்பீடு வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-06-13 13:26 GMT
பொறையாறு,

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கீழையூர், கிடாரங்கொண்டான், காளகஸ்தினாதபுரம், பொன்செய் உள்ளிட்ட கிராமங்களில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.

ஒரு ஏக்கரில் 1,000 வாழைக்கன்றுகள் நட்டு ரூ.1.25 லட்சம் செலவு செய்து வாழை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சூறைக்காற்றுடன் பெய்த மழையால் கீழையூர், கிடாரங்கொண்டான் பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தன.

வாழை மரங்கள் சேதம்

இதுகுறித்து வாழை விவசாயிகள் கீழையூர் ஆனந்தன், அசோக், சங்கர், புருஷோத்தமன் ஆகியோர் கூறுகையில், செம்பனார்கோவில் வட்டார பகுதியில் அதிகமாக வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூவன், ரஸ்தாளி, மொந்தன், பிடி மொந்தன், பச்சை நாடா, கற்பூரவள்ளி, பேயன், செவ்வாழை ஆகியவை அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இருந்தன.

இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி சூறைகாற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. 10 மாதத்தில் பலன் தரக்கூடிய வாழை மரங்கள் சாய்ந்ததால் நாங்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாகி உள்ளோம். மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நிற்பதால் அவை பூ பூக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், வாழை தண்டு மரத்தின் உள்ளே முறிந்து விட்டால் மரம் காய்ந்து விடும்.

இழப்பீடு வழங்க கோரிக்கை

கொரோனா ஊரடங்கால் வாழை பழங்களை கொள்முதல் செய்ய வெளி மாவட்டங்ளை சேர்ந்த வியாபாரிகள் வராததாலும், சுற்று பகுதியில் உள்ள வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதாலும் ஏற்கெனவே நஷ்டம் அடைந்த நிலையில், தற்போது 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் அடைந்து உள்ளன.

கடந்த ஆண்டு நிவர், புரெவி புயல்களால் வாழை விவசாயம் பாதிக்கப்பட்ட போது நிவாரணம் மட்டுமே வழங்கப்பட்டது. மத்திய அரசு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்திருந்தும் இதுவரை காப்பீட்டு தொகை வழங்கவில்லை என்றனர்.

எனவே காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கவும், தற்போது சூறை காற்றால் சாய்ந்த மரங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்