காரில் கடத்திவரப்பட்ட சாராயம் பறிமுதல்

காரில் கடத்திவரப்பட்ட சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-13 16:39 GMT
கச்சிராயப்பாளையம், 

 கல்வராயன்மலை அடிவார பகுதியான கல்படை வனப்பகுதியில் இருந்து காரில் சாராயம் கடத்தி வரப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் கல்படை பரிகம் பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
 அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் தங்களது மோட்டார் சைக்கிள்களில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம்  துரத்தி சென்று அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
 இதில் காரில், லாரி டியூப்களில் 210 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

சாராய ஊறல்

 விசாரணையில் அவர்கள்,  தாழ்மதூர் கிராமத்தை சேர்ந்த ராஜி மகன் இளையராஜா (வயது 30), கல்படை கிராமத்தை சேர்ந்த மொட்டையன் மகன் ராமர் (45), அண்ணாதுரை மகன் பார்த்திபன் (30) என்பது தெரிந்தது.
 இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ராமர் மு்ன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவரும், அ.தி.மு.க.பிரமுகரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்