சமூக இடைவெளியின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடினர்: திருப்போரூர் முருகன் கோவிலில் ஒரே நாளில் 20 திருமணங்கள்

திருப்போரூர் முருகன் கோவில் வளாகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் 20-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தேறியது.

Update: 2021-06-15 06:13 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக கோவில்களுக்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் நடைபெறுவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் கோவில்களில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த பல ஜோடிகள் தவிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருப்போருர் கந்தசாமி கோவிலில் திருமணம் செய்ய ஏராளமான ஜோடிகள் நேற்று காலை வந்தனர்.

கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததால், சுமார் 20-க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருப்போரூர் முருகன் கோவில் வெளி வளாகத்தில் திருமணம் செய்து கொண்டனர். அப்போது கோவில்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடிய நிலையில் பலர், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும், முககவசம் அணியாமலும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இதனால் கொரோனா நோய் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது. எனவே கோவில் முன்பு சில நிபந்தனைகளுடன் திருமண ஜோடிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்