சென்னை மாநகராட்சியில் 614 இடங்களில் தீவிர தூய்மை பணி

சென்னை மாநகராட்சியில் 614 இடங்களில் ஒரு வாரம் தீவிர தூய்மை பணி மேற்கொண்டு 5 ஆயிரம் டன் கழிவுகள் அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-20 04:29 GMT
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

13,345 டன் கழிவுகள் அகற்றம்
பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, குறிப்பிட்ட அளவு குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரமாகவும் மற்றும் உயிரி 
எரிவாயுவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலர்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மறுஉபயோகத்திற்கும், மறுசுழற்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தூய்மைப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கடந்த மாதம் மாநகராட்சியின் சார்பில் தீவிர தூய்மைப்பணி தொடர்ந்து 10 நாட்கள் மேற்கொள்ளப்பட்டு நீண்ட நாட்களாக தேங்கியிருந்த 3,260 டன் குப்பைகள் மற்றும் 10,085 டன் கட்டிடக்கழிவுகள் என மொத்தம் 13,345 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு தூய்மை பணி
தொடர்ந்து, நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்ற மாதந்தோறும் ஒருவார காலத்திற்கு தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் 614 இடங்கள் கண்டறியப்பட்டு வருகிற 21-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு தீவிர தூய்மைப் பணி நடைபெறவுள்ளது. இந்த ஒரு வார காலம் நடைபெறவுள்ள தீவிர தூய்மைப் பணியின் மூலம் சுமார் ஆயிரம் டன் குப்பைகள் மற்றும் 4,500 டன் கட்டிடக் கழிவுகள் அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாநகராட்சியின் சார்பில் தீவிர தூய்மைப் பணிகளை கண்காணிக்க என்ஜினீயர்கள், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்