மாமல்லபுரம் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க தயக்கம் காட்டும் பெற்றோர்

மாமல்லபுரம் அருகே அரசு பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர்.

Update: 2021-06-21 09:31 GMT
மேல்நிலைப்பள்ளி
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்துள்ள மணமை கிராமத்தில் அரசினர் ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஒரே வளாகத்தில் செயல்படும் ஆரம்ப பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 90 மாணவ-மாணவிகளும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செயல்படும் மேல்நிலைப்பள்ளியில் 200 மாணவ- மாணவிகள் என மொத்தம் 290 பேர் இந்த பள்ளி வளாகத்தில் படித்து வருகின்றனர்.1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தலைமை ஆசிரியர் தவிர்த்து பாடம் நடத்த ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அதேபோல் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். முக்கிய பாட பிரிவுகளுக்கு பாடம் நடத்த கடந்த 5 ஆண்டுகளாக ஆசிரியர்கள் இல்லை.அதேபோல் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர், பள்ளி எழுத்தர், இரவு நேர காவலர், துப்புரவு பணியாளர் பதவிகளும் காலியாகவே உள்ளன. இவற்றுக்கும் பல ஆண்டுகளாக இன்னும் பணி நிரவல் செய்யப்படவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
ஆனால் முக்கிய பாடங்களுக்கு கற்பித்தல் பணிக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருவதால் போதிய மாணவர் சேர்க்கையின்றி காணப்படுகிறது. எனவே 
பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மணமை அரசு பள்ளிக்கு 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலியாக உள்ள அனைத்து பாட பிரிவுகளுக்கும் ஆசிரியர்களை உடனடியாக நியமித்து இங்கு 
பயிலும் மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மணமை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்