திருச்செந்தூரில் டிப்ளமோ என்ஜினீயர் கொலை

திருச்செந்தூரில் பள்ளி வளாகத்தில் டிப்ளமோ என்ஜினீயர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-07-02 11:53 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் பள்ளி வளாகத்தில் டிப்ளமோ என்ஜினீயர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
டிப்ளமோ என்ஜினீயர்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஜீவாநகரை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சிவமுருகன் (வயது 24). டிப்ளமோ என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு புனேயில் வேலை கிடைத்து உள்ளது. 
இந்த நிலையில் புனேக்கு செல்வதற்கு முன்பாக சிவமுருகன் கடந்த மாதம் 17-ந்தேதி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.
இறந்து கிடந்தார்
நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் சிவமுருகன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாய் சண்முகசுந்தரி, சிவமுருகனை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது செல்போனில் பேசிய சிவமுருகனின் நண்பர் வனமுத்துகுமார், செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிவமுருகன் விளையாடிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
ஆனால், அதன்பிறகு இரவு வெகுநேரம் ஆகியும் சிவமுருகன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தம்பி முத்தரசன், நண்பர்கள் வனமுத்துகுமார், முருகானந்தம் கார்த்தி ஆகியோர் செந்திலாண்டவர் அரசு பள்ளி வளாகத்துக்கு சென்று தேடிப்பார்த்தனர். அப்போது அங்குள்ள சமையல் அறை அருகில் சிவமுருகன் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதை பார்த்து முத்தரசன் கதறி அழுதார்.
அடித்துக்கொலை
இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
சிவமுருகனும், அவரது நண்பரான திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் வாவுநகரை சேர்ந்த சங்கர் மகன் சண்முகசுந்தரும் (25) ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தகாத வார்த்தைகளால் மாறி மாறி பேசி உள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த சண்முகசுந்தர், அங்கு கிடந்த கட்டையால் சிவமுருகன் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தது விசாரணையில் தெரியவந்தது.
நண்பர் கைது
இதையடுத்து சிவமுருகன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த பயங்கர கொலை தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சண்முகசுந்தரை கைது செய்தனர்.  
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் டிப்ளமோ என்ஜினீயரை அவரது நண்பர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்