டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் அதிகரிப்பு; கேரளாவில் இருந்து கர்நாடகம் வருவோருக்கு கடும் கட்டுப்பாடு

டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், கேரளாவில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் காட்ட வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-02 21:07 GMT
பெங்களூரு:
  
நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

  நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி அது தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. நாட்டில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. சாவு எண்ணிக்கையும் ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது. நாட்டில் மராட்டியம், கேரளா ஆகிய 2 மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் பெருமளவில் கொரோனா பரவல் குறைந்துவிட்டது. கேரளாவில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. மராட்டியத்திலும் 10 ஆயிரம் என்ற அளவில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால் மராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

  இந்த நிலையில் கேரளாவில் இருந்து கர்நாடகம் வருபவர்களும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கண்பிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அதற்கான ஆதாரத்தை காட்டிவிட்டு கர்நாடகம் வர தடை இல்லை. கேரளாவில் இருந்து ரெயில், பஸ், விமானங்களில் ஏறுவதற்கு முன்பு கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்வி பயிலும் மாணவர்கள்

  மருத்துவ காரணங்களுக்காக வருபவர்கள், அரசியல் சாசன பதவியில் இருப்பவர்கள் நேரடியாக கர்நாடகத்திற்கு வர முடியும். ஆனால் எல்லையில் அவர்களின் சளி மாதிரி சேகரிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

  கேரளாவில் இருந்து கல்வி பயில வரும் மாணவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழை வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆகமொத்தம் கேரளா, மராட்டியம் ஆகிய 2 மாநிலங்களை சேர்ந்தவர்கள் கர்நாடகம் வருவதாக இருந்தால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்