சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? 11 பக்க கடிதம் சிக்கியது

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து அவர் எழுதிய 11 பக்க கடிதம் சிக்கியது.

Update: 2021-07-03 06:31 GMT
சென்னை,

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஆக்கி மைதானத்தில் நேற்று முன்தினம் உடல் முழுவதும் எரிந்த நிலையில் மாணவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடம் வந்து, உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த மாணவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் (வயது24) என்பதும், சென்னை ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் துறையில் ஆராய்ச்சி மாணவராகவும், திட்ட கவுரவ விரிவுரையாளராகவும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து மாணவர் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த மாணவரின் தந்தை இஸ்ரோ விஞ்ஞானியான ரகு என்பதும், எர்ணாகுளத்தில் பி.டெக் படிப்பை முடித்த தனது மகன் உன்னிகிருஷ்ணனை, சென்னை ஐ.ஐ.டி.யில் ஆராய்ச்சி படிப்புகளுக்காக சேர்த்ததும் தெரியவந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உன்னிகிருஷ்ணன் ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ளார். இதனால் வேளச்சேரியில் அறை எடுத்து தனது நண்பர்களுடன் தங்கியிருந்து, தினமும் மோட்டார் சைக்கிளில் ஐ.ஐ.டி.க்கு சென்று வந்துள்ளார்.

மேலும் உன்னிகிருஷ்ணன் எலக்ட்ரிக்கல் துறையில் திட்ட கவுரவ விரிவுரையாளராகவும் இருந்ததால், அவருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வந்துள்ளது. உன்னிகிருஷ்ணன் தனது பெற்றோரை பிரிந்து, தனியாக சென்னையில் தங்கி இருந்ததாலும், அவர் படிக்கும் பாடங்கள் கடினமாக இருந்ததாகவும், மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், உன்னிகிருஷ்ணன் தங்கியிருந்த அறைக்கு சென்று, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘பெற்றோரை பிரிந்து தனியாக இங்கு தங்கி படிக்க தன்னால் முடியவில்லை. மேலும், ஆய்வுக்கான பாடம் கடினமாக இருப்பதாகவும், தன்னால் சாதிக்க முடியாது என்றும், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும்’ உருக்கமாக 11 பக்கத்தில் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், வழக்கமாக ஐ.ஐ.டி.க்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் உன்னிகிருஷ்ணன், சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளை வீட்டிலேயே விட்டு சென்றதாகவும், பின்னர் ஆக்கி மைதானத்துக்கு வந்த அவர், பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேற்று பிரேத பரிசோதனை முடிந்து, உன்னிகிருஷ்ணனின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், தனது மகனின் இறப்புக்கு யாரையும் குற்றம் கூறவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டியில் சில மாணவர்கள் தற்கொலைகள் செய்து கொண்டுள்ளனர். ஓரிரு ஆண்டுக்கு முன்பு மாணவி பாத்திமா லத்தீப் மரணம் நாட்டையே உலுக்கியது. அதேபோன்று தற்போதும் ஒரு மாணவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்