வலையில் குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் நாகை மீனவர்கள் கவலை

75 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்றவர்களுக்கு ஏமாற்றம் அடையும் வகையில் வலையில் குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் நாகை மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் டீசல் விலை உயர்வால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2021-07-03 16:44 GMT
நாகப்பட்டினம்:
75 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்றவர்களுக்கு ஏமாற்றம் அடையும் வகையில் வலையில் குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் நாகை மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் டீசல் விலை உயர்வால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை அடைந்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம்

தமிழக கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதம் (ஜூன்) 14-ந் தேதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. ஆனால் நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறையாததால், மீனவர்கள் கடலுக்கு செல்வில்லை. இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள 1,500 விசைப்படகுகள், 6 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க  செல்லவில்லை.
இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகளை பழுது நீக்குவது, வர்ணம் தீட்டுவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 
இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் 75 நாட்களுக்கு பிறகு கடந்த 30-ந்தேதி, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
 

குறைந்த அளவு மீன்கள் சிக்கியது

இதை தொடர்ந்து மீன்பிடிக்க சென்ற ஒரு சில விசைப்படகு மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். இதனால் 2 மாதங்களுக்கும் மேலாக வெறிச்சோடி கிடந்த அக்கரைப்பேட்டை மீன் இறங்கு தளத்தில் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே வியாபாரிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 
கரை திரும்பிய மீனவர்கள் வலைகளில் சங்கரா, நெத்திலி, திருக்கை, இறால், கனவா, சீலா, பாறை உள்ளிட்ட மீன்கள் சிக்கின. வழக்கத்தை விட குறைவான மீன்களே சிக்கியதாக மீனவர்கள் கூறினர். டீசல், ஐஸ் ஆகியவைக்காக செலவு செய்த தொகைக்கு கூட மீன்கள் சிக்கவில்லை என மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து நாகை விசைப்படகு மீனவர்கள் கூறியதாவது:-

ஏமாற்றம்

மீன்பிடி தடைக்காலம் முடிந்தும், கொரோனா ஊரடங்கு காரணமாக மீன்பிடிக்க செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தோம். இந்த நாட்களில் வருவாய் இன்றி பல இன்னல்களை சந்தித்தோம்.  75 நாட்களுக்கு பிறகு ஏராளமான மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றோம். ஆனால் அதிக விலை போகும் ஏற்றுமதி ரக இறால், கணவா, வாவல் உள்ளிட்ட மீன்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை.
 பெரும்பாலான விசைப்படகுகளில் மூன்றில் ஒரு பங்கு மீன்களே கிடைத்தது. நாளுக்கு நாள் உச்சம் தொடும் டீசல் விலை உயர்வை ஒப்பிட்டு பார்க்கும் போது பிடித்து வரப்பட்டுள்ள மீன்களால் லாபம் கிடைக்கவில்லை. இதனால் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் மீன்பிடிக்க சென்ற எங்களுக்கு நஷ்டமே மிஞ்சி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

மீன்கள் விலை

நாகை அக்கரைப்பேட்டை மீன் இறங்குதளத்தில் விற்பனை செய்யப்பட்ட மீன்களில் விலை வருமாறு:-
ஒரு கிலோ சங்கரா மீன் ரூ.250-க்கும், நெத்திலி ரூ.250-க்கும், பாறை ரூ.400-க்கும், திருக்கை ரூ.150-க்கும், இறால் ரூ.200 மற்றும்ரூ.400-க்கும், வஞ்சிரம் ரூ.450 முதல் ரூ.700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்