அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-07-03 16:51 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி  மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2021-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கும், அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு மாணவ-மாணவிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் அளிக்கலாம். விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தூத்துக்குடி கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள மையங்களின் பட்டியல் குறித்த விவரங்கள் மேலே கூறப்பட்டுள்ள இணையதள முகவரியில் உள்ளது.

விண்ணப்பம் அனுப்புபவர்கள் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வருடம் (2021) 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் 9-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்ப கட்டணம் ரூ.50-ஐ டெபிட் கார்டு, கிரெடிட்கார்டு, நெட் பேங்க் அல்லது ஜி.பே. வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும். இணையதளம் வழியாக இந்த மாதம் 28-ந் தேதி வரையில் மட்டுமே விண்ணப்பம் அனுப்பலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு மேலே உள்ள இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்திலுள்ள தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் அல்லது அந்த வளாகத்திலேயே அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் onlineitiadmission@gmail.com, adthoothukudi@gmail.com ஆகிய இணையதளத்திலும், செல்போன் எண் 9499055612, 9442548732 மற்றும் வாட்ஸ்அப் எண் 9499055618 ஆகியவற்றிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்