மேகதாது திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டாம் - மு.க.ஸ்டாலினுக்கு, எடியூரப்பா கடிதம்

விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என்று கோரி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-07-03 21:23 GMT
பெங்களூரு:

மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்

  கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாதுவில் புதிதாக அணைகட்டும் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

  இந்த நிலையில், மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

எதிர்ப்பு வேண்டாம்

  தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனதார வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். கர்நாடக அரசு மேகதாதுவில் குடிநீர் திட்டத்திற்காக அணைகட்டுவதற்கு முடிவு செய்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க மேகதாதுவில் அணைகட்டுகிறோம். மேகதாதுவில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி மற்றும் பெங்களூரு நகரின் கூடுதல் குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை பயன்படுத்தி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

  கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படியே, அணைகட்டும் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இந்த அணையை 2 மாநில அரசுகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேகதாதுவில் புதிய அணைகட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. எனவே மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆலோசனை நடத்தவில்லை

  மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்துள்ளது. மேகதாதுவில் அணைகட்டுவதற்கு மத்திய அரசிடம் கர்நாடக அரசு அனுமதி கேட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழக அரசு காவிரி ஆற்று நீரை பயன்படுத்தி 2 நீர் மின் திட்டங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது. குந்தா நீர்மின் திட்டம் மற்றும் சில்லஹல்லா நீர்மின் திட்டங்களாகும். இவற்றில் குந்தா நீர்மின் திட்டத்திற்கு ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் துறை அனுமதி அளித்துள்ளது.

  சில்லஹல்லா நீர்மின் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு அளித்த கோரிக்கை மனு நிபுணர்கள் குழு அனுமதிக்காக காத்திருக்கிறது. இந்த 2 திட்டத்தை செயல்படுத்துவதற்காக கர்நாடக அரசிடம் தமிழக அரசு எந்த ஒரு ஆலோசனையும் நடத்தவில்லை. அந்த 2 நீர்மின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கர்நாடக அரசின் கவனத்திற்கு கூட தமிழக அரசு கொண்டுவரவில்லை.

நட்புறவை தொடர விரும்புகிறோம்

  அத்துடன் காவிரி ஆற்று நீரை பயன்படுத்தி பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவது குறித்து சென்னை ஐகோர்ட்டில் (மதுரை கிளை) தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளது. தமிழ்நாடு-கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்களுக்கு இடையே நட்புறவை தொடர விரும்புகிறோம். மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் குறித்து 2 மாநில அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

  மற்றொரு முறை தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ள உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன், 2 மாநிலங்களும் இணைந்து செயல்படவும், நட்புறவை வலுப்படுத்தவும் விரும்புகிறேன்.
  இவ்வாறு எடியூரப்பா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்